முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர் அளிக்க திட்டமிட்டுள்ளார்.  44வது சர்வதேச சதுரங்க போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்த போட்டியை நடத்த சென்னை அடுத்த மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்த போட்டி தொடக்கவிழா கடந்த மாதம் 28ம் தேதி நடந்தது. இந்த தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக இருந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

அவரின் அழைப்பை ஏற்று வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் எம்பிக்கள் குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த மாதம்  28ம் தேதி முதல் இந்த மாதம் 9ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது.  இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் வருகிற 16ம் தேதி (நாளை மறுநாள்) முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். அன்று இரவு அவர் டெல்லியில் தங்குகிறார். மறுநாள் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பிரதமரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். சந்திப்பின் போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நேரில் நன்றி தெரிவிக்க உள்ளார். மேலும் தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.

அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது. இதனால், பிரதமர் மோடியுடனான முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். டெல்லி செல்லும் முதல்வர் 17ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத் திட்டம் விரிவாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: