மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், மாயமான தனது மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘மனுதாரர் புகாரின் மீது அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் சென்னையில் உள்ளார். அவரது சித்தியுடன் பிரச்னை உள்ளதால் வர மறுக்கிறார்’’ என்றார். அப்போது போலீசாரின் செல்போன் மூலம் அந்தப் பெண் வாட்ஸ் ஆப் வீடியோகால் வழியாக நீதிபதிகளிடம் பேசினார். அவரிடம் நீதிபதிகள், ‘‘உங்கள் வயது என்ன? எங்கு இருக்கிறீர்கள். என்ன செய்கிறீர்கள்’’ என கேட்டனர்.

அதற்கு அந்தப் பெண், ‘‘எனக்கு 21 வயதாகிறது. சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். நானாக விரும்பியே சென்னையில் உள்ளேன். ‘‘எனது பெற்றோருடன் வர எனக்கு விருப்பம் இல்லை. அங்கு வந்தால் எனக்கு பாதுகாப்பு இல்லை. .அதனால் தான் வரவில்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மேஜரான ஒரு பெண் அவர் விருப்பப்படி வேலை பார்க்கிறார். இதில், பாதுகாப்பு இல்லை என்றால் எப்படி? அவருக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் உங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மனுதாரரை எச்சரித்து, ‘‘அடுத்த விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். பாதுகாப்பில் பிரச்னை செய்வர்களை கைது செய்ய வேண்டி வரும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: