மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்

புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடுவதென 11 எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆர்எல்டி, வெல்பேர் கட்சி மற்றும் சுவராஜ் இந்தியா ஆகிய 11 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மின்னணு வாக்கு இயந்திரம், பணபலம், ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘மின்னணு வாக்கு இயந்திரம், சரிபார்க்கக் கூடிய மற்றும் தணிக்கை செய்யக் கூடிய சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும். தேர்தலில் அரசியல் கட்சி செலவினங்களுக்கு உச்ச வரம்பு இல்லை. தேர்தல் அரசியலில் பணபலம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் தேர்தல் பத்திர திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஊடக தளங்கள் தவறான தகவல் மற்றும் வெறுப்பூட்டும் செய்திகளை பரப்ப தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ள இவற்றை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடும்’ என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: