எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது

சென்னை: எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அட்டீஸ் அபாபா நகரிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்தி ற்கு வந்தது. அதில் எத்தியோப்பியா சென்று வந்த இக்பால் பாஷா (38) என்பவரை சோதனை செய்தபோது, அவரது உடைமைகளில் இருந்து மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கோகைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி. சென்னை விமான நிலையம் 1932ம் ஆண்டு உருவாகிய பின்பு, இதுவரை இந்தளவுக்கு போதைப்பொருள் பறிமுதல் செய்ததே கிடையாது. இதையடுத்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறையினர், ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். விமான நிலைய அதிகாரிகள் இக்பால் பாஷாவை கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அட்டீஸ் அபாபா நகரிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் அங்கோலா நாட்டைச் சேர்ந்த பிபியனா டா கோஸ்டா (59)  என்ற பெண், சுற்றுலா பயணியாக சென்னை வந்தார். பெண் சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை தனியறைக்கு அழைத்துச்சென்று முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அங்கோலா நாட்டு பெண்ணின் கைப்பையில் கோகைகன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் எடை 1.183 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.11.41 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து எத்தியோப்பியா நாட்டிலிருந்து விமானங்களில், போதைப்பொருள் கடத்தி வரப்படுவது பெருமளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: