தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை

* சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம்

* கூட்டாளிகளுடன் கொள்ளையில் ஈடுபட்ட மண்டல மேலாளருக்கு வலை

* வெளி மாநிலங்களுக்கு தப்பி விடாமல் போலீஸ் தேடுதல் வேட்டை

சென்னை:  சென்னையில் உள்ள தனியார் நகைக் கடன் வழங்கும் வங்கியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான 32 கிலோ தங்க, வைர நகைகளை அள்ளி சென்ற மண்டல மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அரும்பாக்கம், 100 அடி சாலை ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கி உள்ளது. தனியார் வங்கியான இங்கு, தங்க நகைகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில், தி.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடன் நகை மதிப்பீட்டாளர், பெண் காசாளர் உட்பட 3 பேர் நேற்று பணியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் வங்கி கதவை திறந்து உள்ளே சென்றபோது, வங்கியில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அந்த அலறல் சத்தத்தால் பயந்துபோன வாடிக்கையாளர் வங்கியில் இருந்து வெளியே ஓடிவந்தார். எனினும் துணிச்சலை வரவழைத்து கொண்டு, வங்கிக்குள் என்ன சத்தம் என்பதை அறிய அச்சத்துடன் உள்ளே சென்றார். அப்போதும் வங்கியின் ஒரு அறையில் இருந்து மீண்டும் முனகலுடன் கூடிய அலறல் சத்தம் கேட்டது. எனினும் அந்த வாடிக்கையாளர் துணிச்சலை வரவழைத்து கொண்டு வங்கியின் உள்ளே சென்றார். அப்போது அலறல் சத்தம் வந்த அறையின் கதவை திறந்து பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சியை பார்த்தும் அச்சத்தில் உறைந்தார். காரணம், அந்த அறையில், 3 நபர்கள் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணிகளை திணித்த நிலையில் அரை மயக்க நிலையில் கிடந்தனர். அந்த காட்சியை பார்த்து வெளியே ஓடிவந்தவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் வங்கி இருந்த பகுதிக்கு வந்தனர். அப்போதுதான், அந்த வங்கியில் கொள்ளை நடந்த சம்பவமே வெளியே தெரியவந்தது. வங்கி அறைக்குள் வாடிக்கையாளர் அழைத்து சென்று காட்டியபோது, கட்டி போட்ட நிலையில் கிடந்த ஊழியர்கள் மற்றும் காவலாளியை போலீசார் மீட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதே வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வந்த சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன்(33). இவர் தனது கூட்டாளிகள் 3 பேருடன் வங்கிக்கு வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். பின்னர் பாதி மயக்கத்தில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப் போட்டு விட்டு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தனர். பட்டபகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டி போட்டு கொள்ளை நடந்த சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாடியை சேர்ந்தவர் முருகன் என்பவர் இந்த நகை கடன் வழங்கும் வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து  வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் கிளைக்கு மாற்றப்பட்ட அவர் நேற்று மதியம் தனது கூட்டாளிகள் 3 பேருடன் வங்கிக்கு வந்துள்ளார். வெளியில் நின்று கொண்டிருந்த காவலாளி சரவணனுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அந்த காவலாளி குளிர்பானத்தை வாங்கி குடிக்கும் போது லேசாக கசப்புத்தன்மையாக இருந்ததால் லேசாக குடித்து விட்டு மீதியை கீழே ஊற்றியிருக்கிறார். அவர் சற்று மயக்க நிலையில் இருந்தபோது முருகன் தனது கூட்டாளிகளுடன் வங்கிக்குள் சென்று அங்கு தனக்கு தெரிந்த ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.  

அவர்களுக்கும் லேசான மயக்கம் ஏற்படுள்ளது. எனினும், அரை மயக்க நிலையில் இருந்த அவர்களை கத்தியை காட்டி மிரட்டி 3 பேரையும் அங்கிருந்த அறைக்குள் அழைத்து சென்று கட்டிப் போட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த சாவியை எடுத்து லாக்கரில் இருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க, வைர நகைகளை 3 பைகளில் அள்ளிப் போட்டுள்ளனர்.  அதன் பிறகு லாக்கர் சாவியை அங்கேயே போட்டுவிட்டுட்டனர். பின்னர் தனது கூட்டாளிகளுடன் சாவகாசமாக மோட்டார் பைக்கில் தப்பி சென்றுள்ளனர். மேலும் காவலாளி சரவணன்(55) தகவல் செல்லாமல் இருப்பதற்காக அவரையும் அதே பகுதியில் கட்டி போட்டு விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

கொள்ளையடித்த தங்க நகைகளுடன் முருகன் வேறு எங்கும் தப்பி சென்று விடாமல் இருக்க அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் மற்ற மாநில போலீசாருக்கும் முருகனின் புகைப்படத்தை போலீசார் அனுப்பியுள்ளனர். முருகனை பிடிக்க அனைத்து காவல் நிலைய போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. வங்கியில் நகைகள் கொள்ளை போன சம்பவம் தெரியவந்ததால், நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வங்கியின் முன்பு குவிந்தனர். அவர்களிடம் போலீசார் நகைகள் விரைவாக மீட்டுத் தருவதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த வங்கி பூட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் வங்கியில் வேலை செய்த ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வங்கியில் வேலை செய்த ஊழியர்களையும் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடங்கிய டிவிஆர் பெட்டியை தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடன் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் முருகன் கடந்த 2 நாட்களாக வேலைக்கு வரவில்லை. கொள்ளையடித்தவுடன் வீட்டுக்கும் செல்லவில்லை. இதனால் அவர் கூட்டாளிகளுடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறத. அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையடித்த தங்க நகைகளுடன் முருகன் வேறு எங்கும் தப்பி சென்று விடாமல் இருக்க அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் மற்ற மாநில போலீசாருக்கும் முருகனின் புகைப்படத்தை போலீசார் அனுப்பியுள்ளனர்.

Related Stories: