வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிய பாஜ தலைவர்கள்

புதுடெல்லி: வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்படி, நேற்று முதல் வீடுகளில் மக்கள் தேசியக்கொடி ஏற்றினர். பாஜ தலைவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை  ஏற்றி, அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் நேற்று (13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்றும்படி கடந்த மாதம் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜ தலைவர்கள், நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பல்வேறு மாநிலங்களில் மக்களும் வீடுகளில் உற்சாகமாக தேசியக்கொடியை ஏற்றினர்.

* அஜ்மீர் தர்கா வரவேற்பு

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் தர்காவின் தலைவர் ஜெயினுல் அபேதீன் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் இல்லங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் திட்டம், மக்களிடையே தேச பக்தியை ஏற்படுத்தும். ஜாதி, மதம்  மற்றும் இனம் ஆகியவற்றை கடந்து அனைத்து இந்திய மக்களும் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: