இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி

சென்னை: ‘வலுவான இந்தியாவை எதிர் கொள்ள எங்கள் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்’ என்று ஜிம்பாப்வே தலைமை பயிற்சியாளர் டேவிட் ஹூட்டன் தெரிவித்துள்ளார். ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நீண்ட நாட்களுக்கு பிறகு ஜிம்பாப்வேயில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அங்கு ஆக.18, 20, 22 தேதிகளில்  விளையாட உள்ள இந்திய அணி இன்று ஜிம்பாப்வே புறப்பட்டுச் செல்கிறது. முக்கிய வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிம்பாப்வேயிலும் கேப்டன் கிரெய்க் எர்வின் உட்பட 4 முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. அதனால்  ரெஜிஸ் சகப்வா தலைமையில் ஜிம்பாப்வே களம் காணுகிறது.

இந்நிலையில் ஜிம்பாப்பேயின் தலைமை பயிற்சியாளர் டேவிட் ஹூட்டன் நேற்று காணொளி மூலம் தினகரனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த அணிக்காக வேலை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பைக்கு ஜிம்பாப்வேயை தகுதி பெற வைக்கும் இலக்கில் பொறுப்பேற்றேன். அதை சரியாக செய்திருக்கிறேன். ஜிம்பாப்வே ஒரு காலத்தில் முதல் 10 அணிகளில் ஒன்றாக இருந்தது. இப்போது வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அந்த இடத்தில் உள்ளன. ஜிம்பாப்வேயை பழையபடி 10 அணிகளுக்குள் ஒன்றாக கொண்டு வருவதுதான் எனது இலக்கு. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும், அவர்களிடம் ஒரே நேரத்தில் 3, 4 வலுவான அணிகளை ஆட வைக்க  முடியும். அதனால் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.

ஜிம்பாவேயிலும்  வீரர்கள் சிலர், வங்கதேச போட்டியின் போது காயமடைந்துள்ளனர். ஆனாலும் இந்தியாவுக்கு எதிராக களம் காண ஆடும் அணிக்கு 11 பேர் மட்டுமல்ல, அறிவிப்பு அணிக்கும் 15 திறமையான வீரர்கள் உள்ளனர். அதனால் இந்தியாவை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். எதிர்வரும் டி20 உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்பது கணிப்பது கடினம். இந்தியா, ஆஸி, நியூசி, இங்கிலாந்து என பல அணிகள் வாய்ப்பில் நீடிக்கின்றன. கூடவே ஒருநாள் கிரிக்கெட் போட்டி வேண்டாம் என்று சிலர் பேசுகிறார்கள். அந்தப்போட்டிக்கு என தனி மவுசு உள்ளது. உலக கோப்பை போட்டி வந்ததும் இந்த கருத்துகள் மாறி விடும். அதுமட்டுமல்ல ஒருநாள் ஆட்டங்கள் மீண்டும் வரவேற்பு பெறுவது உறுதி.

Related Stories: