×

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக விருப்பம்: செப். 5ல் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்? விரைவில் காரிய கமிட்டி கூடுகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடத்துவதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான  தோல்வியை எதிர்கொண்டதால், அப்போதைய தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது  பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இன்று வரை காங்கிரஸ் கட்சியின்  முழுநேரத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. இடைக்கால தலைவராக சோனியா காந்தி  செயல்பட்டு வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஆளும்  பாஜக அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை ராகுல்காந்தி வெளியிட்டு  வருகிறார்.

அதேநேரம் ஜி-23 தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர்  நியமனம் செய்ய வேண்டும், கட்சியை வலுப்படுத்த வியூகங்களை வகுக்க வேண்டும்  என்று வலியுறுத்தினர். இதற்கிடையே ஜி-23 தலைவர்களில் ஒருவரான மூத்த தலைவர்  கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில  மாதங்களுக்கு முன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய  நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது உட்கட்சி தேர்தல் நடத்துவது  தொடர்பாக அறிவிப்புகள் வெளியாக உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் தலைவரின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர்  20ம் தேதிக்குள் முடிவடைவதால், அதற்குள் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியது. அதனால் தலைவர் பதவிக்கான தேர்தல் நாள் ெநருங்கி வரும் வேளையில், கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதும், கட்சியை யார்  வழிநடத்துவது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை  வட்டாரங்கள் கூறுகையில், ‘கட்சியின் தலைமையை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்  என்று குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. ஆனால் சில தலைவர்கள் ராகுல்  காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வருவதை எதிர்க்கின்றனர். விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். வரும் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவும், செப்டம்பர் 3ம் தேதிக்குள் வேட்புமனுவை திரும்பப் பெறவும், செப்டம்பர் 5ம் தேதி தேர்தலை நடத்தவும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான விபரங்கள் செயற்குழு முன் வைக்கப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Raqul Gandhi ,Congress , Rahul Gandhi wants to be president again: Sep. Congress party election in 5? The working committee will meet soon
× RELATED மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும்...