உத்திரமேரூர் அருகே கிளக்காடி கன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் பழமை வாய்ந்த கன்னியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து நேற்று மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை முடிந்த பின் கோயில் வாளாகத்தில் பெண்கள் ஊரணி பொங்கலிட்டும், வேப்பிலை ஆடை அணிந்தும் கோயிலை வலம் வந்து அம்மனை வழிபட்டனர்.

மாலை காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், உடலில் அலகு மற்றும் பழங்களை குத்தி கொண்டு வாகனங்கள் இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடியும் குளக்கரையில் இருந்து புறப்பட்டு அம்மனை இழுத்தவாறு வீதியுலா வந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இந்த நிகழ்ச்சியை கிளக்காடி மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து அம்மனை வழிபட்டனர். பின்னர் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடந்தது.  விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: