பாலம் சீரமைப்பு... தொடர் விடுமுறை எதிரொலி.! சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பாலம் சீரமைப்பு பணி நடைபெறுவதாலும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து செல்வதாலும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி சாலையில் உள்ள ஓங்கூர் பாலத்தில் கடந்த 20நாட்களுக்கு முன்பு அதிர்வு ஏற்பட்டு அந்த சாலை பழுதானது. இதையடுத்து அந்த பாலத்தை நெடுஞ்சாலை துறையினரும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதியை கடப்பதற்கே பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

இந்த நிலையில், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கின்றவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கார், பஸ், ரயில்களில் கிளம்பி செல்கின்றனர். இதனால் ரயில், பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மக்கள் சொந்த ஊர் செல்லும் ஆர்வத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் செல்வதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு பஸ்களில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னையில் இருந்து இன்று காலை ஆயிரக்கணக்கான கார், பைக்குகள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

ஏற்கனவே, பாலம் சீரமைப்பு பணி காரணமாக ஒரே சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகிறது. இதனிடையே இன்று காலை வழக்கத்தைவிட ஏராளமான வாகனங்கள் சென்றதால் இன்று காலை முதல் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கி.மீ.தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மதுராந்தகம் முதல் தொழுப்பேடு அடுத்த ஓங்கூர் பாலம் வரை சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆட்பட்டுள்ளனர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நெரிசல் காணப்பட்டு வருகிறது.

Related Stories: