ராஜஸ்தானில் அன்பின் வெளிப்பாடாக சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்; ஐஎப்எஸ் அதிகாரி பாராட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அன்பின் வெளிப்பாடாக சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்ணை ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா வெகுவாக பாராட்டி உள்ளார். சிறுத்தைக்கு பெண் ஒருவர் ராக்கி கட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்தப் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில், இளஞ்சிவப்பு நிற சேலை அணிந்த பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்ட சிறுத்தைக்கு ராக்கி கட்டுகிறார். இந்தப் படத்தை பகிர்ந்துள்ள சுசாந்தா நந்தா வெளியிட்ட பதிவில், ‘இந்திய மக்களும், விலங்குகளும் காடுகளின் மீது அளவற்ற அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

ராஜஸ்தானில், நோய்வாய்ப்பட்ட சிறுத்தையை காட்டில் ஒப்படைப்பதற்கு முன், பெண் ஒருவர் அந்த சிறுத்தைக்கு ராக்கி கட்டிவிட்டார். அவரது செயலை பார்க்கும் போது அவர் வனவிலங்குகள் மீதான தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு குறித்து ஒருவர் குறிப்பிடுகையில், ‘ராக்கி கட்டுவது அன்பின் அடையாளமானது. அன்பும் பாசமும் இங்கு மிகவும் அழகாக இருக்கிறது. அந்தப் பெண் சிறுத்தைக்கு ராக்கி கட்டியது போல், காடுகளை பராமரிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், ‘காடுகள், வனவிலங்குகளுடன் நாம் இணைந்து இப்படித்தான் வாழ வேண்டும். கடவுள் எல்லா வகையான உயிர்களையும் படைத்துள்ளார்; இந்த உலகம் மனிதர்களுக்காக மட்டுமல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: