எத்தியோபியாவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு ரூ.100 கோடி போதை பொருட்கள் கடத்தல் பின்னணியில் யார் யார்? அதிகாரிகள் தீவிர விசாரணை

மீனம்பாக்கம்: எத்தியோபியா நாட்டில் இருந்து சென்னைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் ஒரு பயணியிடம் ரூ.100 கோடி மதிப்புடைய 9 கிலோ 590 கிராம் கொக்கைன், ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என தீவிர விசாரணை நடக்கிறது. எத்தியோபியா நாட்டில் இருந்து பெருமளவு போதை பொருள் சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், ஆப்பிரிக்கா நாடான எத்தியோபியாவின் அடீஸ் அபாபா நகரில் இருந்து வந்த எத்தியோபியன் ஏர்லைன்சில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர். குறிப்பாக ஆப்பிரிக்க  நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அவர்களிடம் எந்தவிதமான போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில் இந்தியரான இக்பால் பாஷா (38) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி, ‘எதற்காக எத்தியோபியாவுக்கு சென்று வருகிறீர்கள்’ என அதிகாரிகள் கேட்டனர். அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. உடனே அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர். அவர் அணிந்திருந்த காலணிகள் மற்றும் உள்ளாடைகள் மற்றும் கோட்டுக்குள் ரகசிய பை என பல இடங்களில் மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைன் மற்றும் ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி. இது சுங்க அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியது. சென்னை விமான நிலையம் 1932ம் ஆண்டு உருவாகிய பின்பு, இதுவரை இந்தளவுக்கு போதை பொருள் பறிமுதல் செய்ததே கிடையாது.

இதையடுத்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறையினர், ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருளை பறிமுதல் செய்தனர். இவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து, எங்கெல்லாம் சப்ளை செய்ய இருந்தார், யாருக்கு கடத்தி வந்தார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 10ம் தேதிதான் தமிழகத்தில் போதை பொருட்கள் விற்றால் அவர்களது மொத்த சொத்துக்களும் முடக்கப்படும் என கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு விட்டிருந்த நிலையில் இந்த போதை பொருட்கள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: