மதமில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களுக்கு சலுகைகளை நிராகரிக்க கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு மதமில்லை என்ற காரணத்திற்காக கல்வி சலுகைகளை நிராகரிக்கக் கூடாது என்று கேரள அரசுக்கு அம் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த 5 மாணவர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருந்த விவரம் வருமாறு: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். உயர் கல்வி படிப்பதற்காக கல்லூரியில் விண்ணப்பித்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான சலுகை எங்களுக்கு நிராகரிக்கப்பட்டது.

உயர் சமூகத்தில் பிறந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 164 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு மதம் இல்லை என்ற காரணத்திற்காக சலுகை வழங்க முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எங்களுக்கும் அதே சலுகைகளை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறியது: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மதம் இல்லை என்ற காரணத்திற்காக சலுகைகளை நிராகரிக்க கூடாது. 5 மாணவர்களுக்கும் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்ற பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்கு உரிய சான்றிதழை வழங்க வேண்டும். உயர் சமூகத்தில் பிறந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் இவர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். மதசார்பற்ற இந்திய நாட்டில் தங்களுக்கு மதம் இல்லை என்று கூறும் இந்த மாணவர்களை நான் பாராட்டுகிறேன் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

Related Stories: