வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...

மதுரை: காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த திருமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரில் தொடங்கியிருக்கிறது. கடந்த 11 தேதி ஜம்மு காஷ்மீர் உள்ள ரஜெளரி என்ற ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த 11 தேதி நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த அவரது உடல் ராணுவ மரியாதை செலுத்தப்பட்ட பின்பு, இன்று விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் வைத்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் மரியாதை செலுத்தினர். அதன் பின்பு அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடல் அவரின் வீட்டில் 10 நிமிடம் வைக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் தமிழக அரசின் சார்பாக அவரது குடும்பத்திற்கு, ஏற்கனவே தமிழக முதல்வர் அறிவித்திருந்த 20,00,000 ரூபாய் காசோலையை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அதனை தொடர்ந்து அவரது உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வைத்து அவரது சொந்த இடத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அந்த இடத்தில் தான் அவரது உடல் ராணுவ மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யபட இருக்கிறது. அவரது உடலுக்கு அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த வீரமகன் தற்போது தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்ததால்    கிராமமே சோகமான சூழலில் இருக்கிறது. இருப்பினும் அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார் என்ற கருத்தை கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பதிவு செய்கின்றனர். இறுதி ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: