ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களை கைது செய்த சிபிஐ டிஎஸ்பி-யை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி? டிரைவர் பலி

கோரக்பூர்: ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களை கைது செய்த சிபிஐ டிஎஸ்பி-யை உத்தரபிரதேசத்தில் லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவத்தில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் பலியானார். உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் சிபிஐ டிஎஸ்பி ரூபேஷ் குமார் வஸ்தவா, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இருந்து கோரக்பூருக்கு தனது டிரைவருடன் காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிஎஸ்பி ரூபேஷ் குமார் வஸ்தவா மற்றும் அவரது டிரைவர் உயர்தப்பினர். ஆனால் விபத்துக்கு காரணமான லாரி கவிழ்ந்ததால், அந்த லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

லேசான காயமடைந்த டிஎஸ்பி ரூபேஷ் குமார் வஸ்தவா மற்றும் அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து குல்ரிஹா போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிபிஐ தலைமையக அதிகாரிகளும் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மகாராஜ்கஞ்ச் மாவட்டம் பிப்ரலாலா பகுதியில் வசிக்கும் ரூபேஷ் குமார் வஸ்தவா, ெடல்லி சிபிஐ தலைமையகத்தின் கிளையில் பணியாற்றி வருகிறார். டெல்லியில் இருந்து ஒருநாள் விடுப்பில் கோரக்பூர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பர்கதீன் என்ற இடத்தில் லாரி ஒன்று அவரது கார் மீது மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிஎஸ்பி மற்றும் அவரது டிரைவர் உயிர்தப்பினர்.

டிஎஸ்பியின் டிரைவரின் சாமர்த்தியத்தால், அவர்கள் இருவரும் தப்பினர். உயிரிழந்த லாரி டிரைவர் ரத்தன் குமார் மற்றும் அவரது பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். சிபிஐ டிஎஸ்பி ரூபேஷ் குமார் வஸ்தவா, தற்போது பல முக்கியமான வழக்குகளை விசாரித்து வருகிறார். பீகார் முன்னாள் முதல்வர் லாலு யாதவின் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு ஆகியவற்றை விசாரித்து வருகிறார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் பல மாநில அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரித்து வருகிறார். இவர், ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகளில் ஒருவராவார். இவ்வாறான நிலையில் அவர் மீதான கொலைவெறித் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருக்க வாய்ப்பு உள்ளது. ரூபேஷ் குமார்  வஸ்தவா அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐயின் உயர்மட்ட அதிகாரிகளும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய் படை அனுப்பி மாதிரிகள் எடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் விபத்து போல் தெரிந்தாலும் கூட, பல்வேறு கோண விசாரணைக்கு பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும். இவ்வழக்கின் முக்கியத்துவம் குறித்து, சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’ என்றனர். இதுகுறித்து சிபிஐ டிஎஸ்பி ரூபேஷ் குமார் வஸ்தவா கூறுகையில், ‘எனது வாகனத்தின் மீது லாரி தான் முதலில் மோதியது. லாரியின் டிரைவர் ஸ்டியரிங்கை வேண்டுமென்றே நான் சென்ற காரின் பக்கம் திருப்பினார். இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி உள்ளது. எனது ஓட்டுநர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காரை திருப்பியதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது’ என்றார்.

Related Stories: