ஒரேயொரு பட்டப்படிப்புடன் மாணவர்கள் நிறுத்தக்கூடாது.! கல்வி, மருத்துவ படிப்புகளுக்காக பல திட்டம் செயல்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பெரம்பூர்: கல்வி, மருத்துவ படிப்புகளுக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’ மாணவர்கள் ஒரேயொரு பட்டப்படிப்புடன் நிறுத்தக்கூடாது’ என்று கேட்டுக்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். மக்களின் பல்வேறு அடிப்படை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பல பணிகளை துவக்கிவைத்தார். கொளத்தூர் எவர்வின் பள்ளியில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் இடையே நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை முடித்து 2ம் ஆண்டில் மாணவர்கள் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். இந்த கல்லூரியில் புதிதாக பிஏ சைவ சித்தாந்தம் என்ற பாடப்பிரிவும் இந்த கல்வியாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 240 இடங்களுக்கு 1089 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஐந்தில் ஒருவருக்கு தான் இடம் தரமுடியும் என்ற அளவிற்கு இந்த கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது. இதற்கு காரணமான அறநிலையத்துறை மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தாண்டு சேர்ந்த  மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் சென்ற ஆண்டு முதலாமாண்டு முடித்த மாணவ, மாணவி களுக்கும் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும். கட்டணம் இல்லை என்று கூறியவுடன் யாரும்  குறைவாக மதிப்பீடு செய்ய வேண்டாம். கல்வியானது அனைவருக்கும் எளிய முறையில் கிடைக்க அனைவரும் முன்னேற வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்துடன் மாணவர் சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய அக்கறையின் காரணமாக இந்த அரசு செய்யக்கூடிய கடமையாக நாங்கள் கருதுகிறோம்.

இலவசங்கள் வேறு, நலத் திட்டங்கள் வேறு என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்ததை மாணவர்கள் படித்திருப்பீர்கள். இதுதொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே நடந்து கொண்டு உள்ளது. கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசமாகாது. ஏனென்றால் அது அறிவு நலன் மற்றும் உடல் நலன் சார்ந்தது. கல்வி உடல் நலம் சார்ந்தது. மருத்துவம் இரண்டிலும் போதுமான அளவு நல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என இந்த அரசு நினைக்கிறது. கல்வி மற்றும் மருத்துவத்துக்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதெல்லாம் இலவச திட்டங்கள் அல்ல, சமூக நலத்திட்டங்கள், ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்வதற்காக இவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலவசங்கள் வேண்டாம் என அறிவுரை கூறுவதற்கு தற்போது புதிது புதிதாக ஆட்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இதற்கு மேல் பேசினால் இது அரசியல் ஆகிவிடும். எனவே இது பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதே நேரத்தில் மாணவ செல்வங்களுக்கு நான் சொல்ல விரும்புவது படிப்பில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.  தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரேஒரு பட்டப் படிப்புடன் நிறுத்தி விடவேண்டாம். உயர்கல்வியை தொடருங்கள். குறிப்பாக பெண்கள் பட்டம் வாங்கியதும் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக நீங்கள் சொந்த காலில் நிற்கக்கூடிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை சட்டமன்ற உறுப்பினராக அல்ல, முதலமைச்சராக  அல்ல, உங்களது தந்தையாக கேட்டு கொள்கின்றேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.c

Related Stories: