×

மருத்துவம், என்ஜினியரிங் படிப்புக்கு ஒரே நுழைவு தேர்வு: ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் நீட் என்னும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒன்றிய  அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிற என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி.களிலும், குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பப்படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு உள்ளது.

இந்த நிலையில் நீட், ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகளையும் தற்போதுள்ள கியூட் என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன் (இளநிலை) இணைப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றிய  அரசு பரிசீலித்து வருகிறது.  ஒருங்கிணைந்த பொது நுழைவுத்தேர்வினை அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நாம் 3 பொது நுழைவுத்தேர்வுகளை கொண்டிருக்கிறோம். அவை, நீட், ஜே.இ.இ.(மெயின்), கியூட் ஆகும். இந்த தேர்வுகளை எழுதுகிற பெரும்பாலான மாணவர்கள் பொதுவானவர்கள்.இந்த தேர்வுகள் அனைத்தும் என்.டி.ஏ. என அழைக்கப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.

எனவே நாங்கள் இந்த படிப்புகள் அனைத்துக்கும் மாணவர் சேர்க்கையை கியூட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஏன் செய்யக்கூடாது என எண்ணுகிறோம். கியூட் தேர்வு, 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இந்த தேர்வினை 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால் நீட் தேர்வினை எழுத 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு 2020-ம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கையும் ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு என்ற அம்சத்தை கொண்டுள்ளது. உயர்கல்வி படிப்பதற்காக பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எழுதுகிற சுமையை இது குறைக்கும் என்று தெரிவித்தனர்.

நீட் தேர்வுக்கு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்கள் வேண்டும். ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் முக்கியம். இந்த பாடங்கள் ஏற்கனவே கியூட்டில் உள்ளது. எனவே மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கியூட் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்துவதில் பிரச்சினை எதுவும் இருக்காது. இது தொடர்பாக தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் விவாதிக்க தொடங்கி உள்ளது. மாணவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை தருவதற்கு ஏதுவாக ஆண்டுக்கு இருமுறை இந்த தேர்வு நடத்தப்படும். மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் முடிந்ததும் முதல் அமர்வு தேர்வு நடத்தப்படும். மற்றொரு அமர்வு தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Single Entrance Examination for Medical, Engineering Courses, Union Govt Review
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...