போதை தகராறில் விபரீதம்; தொழிலாளிக்கு கத்திக்குத்து நண்பர் கைது

அண்ணாநகர்: போதை தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார். புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் (45), முரளி (25). நண்பர்களான இவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு அருகே உள்ள மாநகராட்சியின்  ஜெய் பார்க்கில் 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர். போதை தலைக்கேறியதும் முரளி, மோகன்ராஜ் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

அப்போது முரளி, தனது ஆடையினுள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன்ராஜ் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி  சென்றார்.படுகாயமடைந்த மோகன்ராஜ், ரத்த வெள்ளத்தில் வலி தாளாமல் அலறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ் 108 ஆம்புலன்சை மூலம், உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த மோகன்ராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜிடம் விசாரணை நடத்தினர். மேலும், தப்பியோடிய  முரளியை தேடி வந்தனர். இந்நிலையில்,  கோயம்பேடு பஸ் நிலையத்தில் முரளி சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று முரளியை மடக்கி, பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்.

Related Stories: