போதைப் பொருட்களுக்கு எதிரான திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முழு ஆதரவு: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: போதைப் பொருள் தடுப்புக்காக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. கடுமையான போதையும், மோசமான பின் விளைவுகளையும் தரக் கூடிய கஞ்சா துகள்கள், இன்றைய இளைஞர்களிடம் மிகச் சாதாரணமாக புழங்க ஆரம்பித்து விட்டது. இந்த சூழலில் எந்த முதல்வர்களும் இதுவரையில் செய்யாத வகையில், போதைப் பொருட்கள் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல்கள், விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தனியாக சிறப்பு பிரிவை அமைத்து போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழக இளைஞர்களை காக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையைப் போதையிலிருந்து மாற்றி அமைக்கும் வகையில் விளையாட்டு போன்றவற்றை அவர்களிடத்தில் ஊக்குவிக்க வேண்டும். அதற்காக சிறப்பு ஆசிரியர்களை கல்வி நிறுவனங்களில் நியமித்திட வேண்டும். தமிழக முதல்வரின் போதைப் பொருட்களுக்கு எதிரான திட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவையும், தேவையான ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: