சென்னையில் சிறப்பு சோதனை; 24 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களாக போலீசார் நடத்திய  சிறப்பு சோதனையில் 24 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 24 கிலோ 24 கிராம் கஞ்சா, 5 கிராம் பெத்தமைன், 2 செல்போன்கள் மற்றும் 4  இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்கள், என சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: