தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ. 6.5 கோடியில் வளர்ச்சி பணிகள்; மன்ற கூட்டத்தில் அனுமதி

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ. 6.5 கோடி  செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் உள்ள மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மன்ற கூட்டம் நேற்று தண்டையார்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மண்டல அதிகாரி மணிவண்ணன், நிலை குழு தலைவர் சர்ப ஜெயா தாஸ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மழைநீர் கால்வாய் பணிகளை  விரைந்து முடிப்பது, ஆரம்ப பள்ளிக்கூடங்களில் கூடுதல் வகுப்பறை கட்டுவது,  விளையாட்டு திடல்களை மேம்படுத்துவது, சேதமான சாலைகளை சீரமைப்பது,   தெருவிளக்குகளை பராமரிப்பது, குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது உள்ளிட்ட  பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்து தருவதாக உறுதி கூறினர். கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரூ. 6.5 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: