சென்னையில் ஒரு வார சிறப்பு சோதனையில் 1,861 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; கடை உரிமையாளர்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,861 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ. 10லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.  

இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3ம்தேதி முதல் 9ம்தேதி வரை 6,478 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2,548 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,861 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 10,76,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் 2,555 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 208 கடை உரிமையாளர்களிடமிருந்து 119 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 8,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: