ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில்  மாவட்ட போலீஸ் எஸ்பி திடீர் ஆய்வு  நடத்தினார். ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் தற்போது இன்ஸ்பெக்டர்,  எஸ்.ஐ உள்பட 27 பேர் பணியாற்றி வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் போலீஸ் பற்றாக்குறையாக இருக்கலாம் என பொதுமக்கள் கருதினர். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி செபாஸ் கல்யாண் திடீரென ஊத்துக்கோட்டை ஆந்திர எல்லையில் உள்ள போலீஸ் சோதனை சாவடியை ஆய்வு செய்தார்.

அப்போது, ஆந்திராவிலிருந்து போதைப்பொருட்கள் மற்றும்  மதுபானங்கள் தமிழகத்திற்கு வராத அளவிற்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், போதை பொருட்களை  யாராவது விற்பனை செய்தால் கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரிடம் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது இன்ஸ்பெக்டர் ஏழுமலை, எஸ்.ஐக்கள் வரதராஜன், பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: