ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சேதமடையும் மேம்பாலம்; நோய் தொற்று பரவும் அச்சம்

ஊத்துக்கோட்டை: ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்காக, ஊத்துக்கோட்டை ஆரணியாற்றிலிருந்து  ஆழ்துளை கிணறு மூலம், பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை  தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.  அதை அங்கு தேக்கி வைத்து பின்னர் காலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும்  குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டையில்  உள்ள  திருவள்ளூர் சாலையின் இருபுறமும்  மழைநீர் செல்வதற்காகவும்,  இந்த மழைநீர் ஆற்றில் கலப்பதற்காக 1980ம் ஆண்டு மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. பின்னர், ஆரணியாற்றின் குறுக்கே ரூ.28 கோடியில் புதிய மேம்பாலமும் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டுவதற்காக 500 மீட்டர் தூரத்திற்கு  சாலையின் இருபுறமும், புதிதாக மழைநீர் கால்வாயும் கட்டப்பட்டது.

அந்த கால்வாய் பழைய கால்வாயுடன் இணைக்கப்பட்டது. தற்போது,  இந்த கால்வாயில் திருவள்ளூர் சாலை மற்றும் நேரு பஜார் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத்திய கழிவு நீரை இந்த கால்வாயில் விடுகின்றனர்.  பின்னர், இந்த கழிவுநீர் கால்வாய் வழியாக சென்று ஆரணியாற்றில் விடப்படுகிறது. இதனால் பாலத்தின் கீழ் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பாலம் சேதமடைந்து பலவீனம் அடைய வாய்ப்பும் உள்ளது. மேலும், ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பேரூராட்சி சார்பில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள  ஆழ்துளை கிணற்றில் கழிவு நீர் கலக்கும் அவல நிலை உள்ளது. இதனால், குடிநீர் மற்றும் கழிவுநீர் கலப்பதால், குடிநீர் மாசடையும் நிலையும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மாசடைந்த நீரை குடித்தால் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மழைநீர்க்கால்வாயில், கழிவுநீர் விடுவதை பேரூராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: