மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி; எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருத்தணி:  திருத்தணி உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே நேற்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்,  மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி நகராட்சி காந்தி  ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளியில்  நடந்த போதைப்பொருள் ஒழிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சியில்  திருவள்ளூர் மாவட்ட  செயலாளர் திருத்தணி பூபதி  மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்,  திருத்தணி நகராட்சி துணை நகர் மன்ற தலைவர் சாம்ராஜ்ஜி மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க,  பள்ளியில் படிக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட  மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து,  மாணவர்களிடம் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பேசும்போது, `மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப்  பொருட்களை ஒழிக்க முன்வர வேண்டும்.  மாணவர்கள், இளைஞர்கள், அனைத்து துறை சார்ந்தவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டில் இனி போதை பொருளுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். அதேபோல் போதை பொருட்கள் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தரப்பினரால் விற்கப்படும். எனவே அது குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையானால் அதிலிருந்து மீளுவது மிகவும் சிரமம். எனவே இதனை பரப்பவிடாமல் தடுக்க வேண்டியது நமது கடமை. இளம் சமுதாயத்தினரை அழிக்கும் போதைப் பொருட்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை அனுமதிக்க கூடாது’என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். இதேபோல் திருத்தணியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.  முன்னதாக தலைமை ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார். வட்டாட்சியர் கண்ணன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், கிராமநிர்வாக அலுவலர் ஜோதிபிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி முன்மொழிந்தார். பள்ளி மாணவர்கள் 2000 பேரும் உறுதிமொழி ஏற்றனர். கிழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிதாளாளர் பாதிரியார் கிரீத் மேத்யூஸ் தலைமையிலும் ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், துணை தலைவர் சிலம்பரன் முன்னிலையிலும் பள்ளியில் போதை பொருள் ஒழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யனாரப்பன் பங்கேற்று மாணவர்களிடம் போதை பொருளின் தீய விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி மொழியேற்றனர்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையடங்கிய படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. புழல்: செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் பங்கேற்று உறுதிமொழியை முன்மொழிய, அனைத்து மாணவர்களும் கூறி உறுதிமொழி ஏற்றனர். இதில் செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணை தலைவர் விப்ரநாராயணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெய்மதன், பேரூர் திமுக செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை மாணவர்கள் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மீனாகுமாரி தலைமை தாங்கினார். பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் மோகனா, சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் பங்கேற்று உறுதிமொழியை முன்மொழிய, அப்பள்ளி மாணவர்கள் கூறி உறுதிமொழி ஏற்றனர். இதில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் இன்னாசி, செயலாளர் முகமது அலி, செந்தில், சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: