கீழ் சிட்ரபாக்கம் கிராமத்தில் மாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: கீழ் சிட்ரபாக்கம் கிராமத்தில் மாத்தம்மன் கோயிலில்  கும்பாபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜை  நடந்தது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்  கீழ் சிட்ரபாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், மாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. அன்று காலை விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசபூஜை,  மகா கணபதி பூஜையும் மாலை 5 மணிக்கு கங்காதேவியும்,  பூமி தேவியும் ஆலயத்திற்கு அழைத்து வருதல்,  வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பிரவேசபலி பூஜை முதல் கால யாகசாலை  பூஜையும் நடந்தது.  

இதனைத்தொடர்ந்து, நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையும்,  வேள்வி பூஜையும்,  விக்னேஸ்வர பூஜையும், பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மாத்தம்மன் கோயில் கோபுர கலசத்தில் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக  எடுத்து வரப்பட்ட  புனிதநீரை, கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தனர். மாத்தம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மூலவருக்கு வளையல்  அலங்காரம் செய்து சுமங்கலி பூஜையும், திருவிளக்கு பூஜையும்,  திருமாங்கல்யம் சாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு திருவீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை  கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: