துவரம் பருப்பு பதுக்கலை கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: துவரம் பருப்பின் விலை உயர்ந்து வருவதால் பதுக்கலை தடுக்க வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்களை கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 2வது வாரத்தில் இருந்து துவரம் பருப்பின் விலை உயர்ந்து வருகிறது. சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் விதமாக சிலர் இதன் விற்பனையை கட்டுப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ம் ஆண்டு பிரிவு 3(2)(எச்) மற்றும் 3(2)(ஐ) ன் கீழ் மொத்த விற்பனையாளர்கள் துவரம் பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.

அதிக விலைக்கு இதனை விற்கும் நோக்கத்தில்  விற்பனையாளர்களில் ஒரு பிரிவினர் விற்பனையை கட்டுப்படுத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே, வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடுவதை தடுக்க மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள்   கண்காணிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: