×

சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்

சென்னை: இந்தியா-நேபாளம் இடையே நடைப்பெற்ற  கேரம் போட்டி எல்லா தங்கப் பதக்கங்களையும் வென்று தமிழகம் திரும்பி   தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாளத்தில் உள்ள பொகோரோ நகரில்  இந்தியா, நேபாளம் நாடுகளுக்கு இடையே  ‘2வது சர்வதேச  இந்தோ-நேபாள் கேரம் போட்டி’ நடைபெற்றது.  இதில் யு10, யு14 முதல் ஏ19  முதல் மாஸ்டர் வரை  ஆடவர், மகளிர் என 2 வகையாக 37 பிரிவுகளில் கேரம் ஆட்டங்கள் நடைபெற்றன.

இந்தியா சார்பில் 37 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த 37பேரும் தாங்கள் பங்கேற்ற  ஆட்டங்கள் எல்லாவற்றிலும் நேபாள வீரர், வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம்  வென்றனர். வெற்றி வாகை சூடி தமிழகம் திரும்பிய  வீரர் வீராங்கனைகளுக்கு சென்னை ரயில்நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் பங்கேற்ற 37 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் . இவர்கள்  ஏப்ரல் மாதம்  தஞ்சாவூர், வல்லத்தில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில் வென்றவர்கள். அதனால் இவர்கள் தமிழ்நாடு சார்பில், ஜூன் மாதம் உத்ரபிரதேச மாநிலம் மதுராவில் நடந்த  தேசிய அளவிலான கேரம் போட்டியில் விளையாடினர். அதிலும் இந்த 37 பேரும் வெற்றி பெற, தமிழக அணியே  தேசிய அணிக்கு தேர்வானது. கேரம் உலக சாம்பியன் போட்டியில்  சாம்பியன் பட்டம் வென்ற 2இந்தியர்கள் மரியம் இருதயராஜ், இளவழகி இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கேரம் போட்டி; முதல்வருக்கு வேண்டுகோள்: இந்திய அணியின் பயிற்சியாளர் எஸ்.சக்திவேல் பேசுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக நானும்,  எனது மனைவி இளவழகியும் மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய 37 பேரில் 33 பேர் திருவள்ளூர், 2பேர் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் இடம் பிடித்திருந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடத்தி தமிழ்நாடு  முதலமைச்சர் உலகின் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பி உள்ளார். அதேபோல் கேரம் போட்டிக்கும் ஒரு சர்வதேச போட்டியை தமிழ் நாடு முதல் அமைச்சர், இங்கு நடத்தினால் எல்லா வெற்றியையும்  பெற்று அவருக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம்’என்று வேண்டுகோள் விடுத்தார்.

Tags : International Carrom Tournament ,Tamil Nadu , International Carrom Tournament: Tamil Nadu Players Win All Golds
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...