மின்பழுதை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பரிதாப சாவு; வாலாஜாபாத்தில் சோகம்

வாலாஜாபாத்: மின் பழுதை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பரிதாபமாக இறந்தார். வாலாஜாபாத்தில் நள்ளிரவில் நடந்த அச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (46). வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில், வயர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களது 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மோகன்ராஜ், மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நேர பணிக்கு மோகன்ராஜ் சென்றார். வழக்கம்போல பணிகளை பார்த்து கொண்டிருந்தார். நள்ளிரவில், காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள மின் கம்பம் மீது கனரக லாரி மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. உடனே மோகன்ராஜ் உள்ளிட்ட சக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சாலையில் சாயும் நிலையில் இருந்த மின் கம்பத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பழுதான மின் கம்பத்தின் மீது ஏறி வாலாஜாபாத் மார்க்கமாக சென்ற மின்சார லைனை மாற்றி அவளூர் மார்க்கமாக செல்லும் லைனில் இணைக்க முற்பட்டார் மோகன்ராஜ். அந்த நேரத்தில் மின்சாரம் வந்து விட்டது. அதனால், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வாலாஜாபாத் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோகன்ராஜின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் இணைப்பை சரி செய்ய சென்றபோது, மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: