கடன் தள்ளுபடிகள் பற்றி எப்போது விவாதிக்கலாம்?: பிரதமர் மோடிக்கு காங். கேள்வி

புதுடெல்லி: ‘வங்கி கடன்கள் தள்ளுபடி, கார்ப்பரேட் வரி குறைப்பு குறித்து  எப்போது விவாதம் நடத்தப்படும்?’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி கேட்டுள்ளார். ‘வாக்காளர்களைக் கவர இலவச திட்டங்களை கட்சிகள் அறிவிக்கின்றன. இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது,’ என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசினார். இதற்காக மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று கூறுகையில், ‘ரூ.5.8 லட்சம் கோடிக்கான வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. ரூ.1.45 லட்சம் கோடி கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.9.92 லட்சம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இதில், ரூ.7.27 லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானது.

தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகையில் ரூ.1.03 லட்சம் கோடி மட்டும் மீட்கப்பட்டு உள்ளது என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.   மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதும், அவற்றுக்கான வரிகளை குறைப்பது குறித்து எப்போது விவாதம் நடத்தப்படும் என்பதற்கு பிரதமர் மோடி  பதில் அளிப்பார் என்று நம்புகிறோம்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: