ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ தகுதி தேர்வுகளும் இணைப்பு: யுஜிசி அதிரடி திட்டம்

புதுடெல்லி:  ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த  பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மருத்துவத்துக்கு நீட் தேர்வு, என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி  ஆகிய கல்வி நிலையங்களில் உள்ள படிப்புகளுக்கு ஜேஇஇ, ஜேஇஇ அட்வான்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு கியூட் நுழைவுத் தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்த கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இவ்வாறு தனித்தனியாக பொது நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால், அரசுக்கு பல நெருக்கடிகள்,  கால விரையம், பண விரையம் ஏற்படுகின்றன. மாணவர்களுக்கும் தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, ‘ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு விரும்புகிறது. இதன்படி,  கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட்,  ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து, நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வாக நடத்த  பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) திட்டமிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ‘பொறியியல், மருத்துவ நுழைவுத் தேர்வுகளை, ஒன்றிய பல்கலைக் கழகங்களுக்கான இளநிலை  கியூட் நுழைவுத் தேர்வுடன் இணைக்க பரிசீலிக்கப்படுகிறது.  கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்  பாடங்களை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், இந்த 3  விதமான நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை தவிர்க்க ஒருமுறை தேர்வெழுதி, வெவ்வேறு துறைகளுக்குத் தகுதி பெற முடியும்.

இது தொடர்பாக உயர்கல்வித் துறையுடன் ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், நீட் தேர்வை ஓஎம்ஆர் அடிப்படையில் மாணவர்கள் எழுதுகின்றனர். அதை கணினி  தேர்வாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது,’ என தெரிவித்தார். இந்த புதிய முடிவால் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஒருங்கிணைக்க முடியுமா? மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: