உலகத்துக்கே பேரழிவு ஏற்படும் அணு உலை அருகே சண்டை வேண்டாம்: ரஷ்யா, உக்ரைனுக்கு ஐநா அறிவுரை

ஐக்கிய நாடுகள்: உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா அணு உலை பகுதியில் தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யா, உக்ரைனை ஐநா கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர், கடந்த 6 மாதங்களாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் ரஷ்ய படையினர் ஏவுகணை, வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலை அமைந்துள்ள உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அணு உலை ஆபத்தான நிலையில் உள்ளது. இது வெடித்து சிதறினால் உலகளவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு, கடுமையான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும்.

எனவே, இப்பகுதியில் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்யா, உக்ரைனுக்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி மூலம் பேசிய சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரபேல் குரோசி, ‘ரஷ்யா, உக்ரைன் நாடுகள் ஜபோரிஜ்ஜியா அணுஉலை பகுதி தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான், அணு ஆயுத நிபுணர்கள் ஜபோரிஜ்ஜியா அணு உலையின் நிலை என்ன என்பது குறித்தும், அதன் பாதுகாப்பு பற்றியும் ஆய்வு செய்ய முடியும்,’ என்று கூறினார். இதனிடையே, ஜபோரிஜ்ஜியா அணுஉலை பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதால், உலகளவில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இந்தியாவும் கவலை தெரிவித்துள்ளது.

Related Stories: