திருத்தணி அருகே கார் - லாரி மோதல் திமுக பிரமுகர் பலி

திருத்தணி: திருத்தணி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் திமுக பிரமுகர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருத்தணி அடுத்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குபேரன் (45). திமுக பிரமுகர். இவர் திருவள்ளூரில் சினிமா தியேட்டர், விடுதி, சேம்பர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். மேலும், குபேரனுக்கு சொந்தமான நிலம் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ளது. அங்கு இவருக்கு சொந்தமான செங்கல் சேம்பரும்  உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை குபேரன் ஆந்திர மாநிலம் புத்தூருக்கு தனக்கு சொந்தமான செங்கல் சேம்பர் மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட தனது காரில் சென்றார். அங்கு இந்த பணிகளை செய்து முடித்த பின்னர் மீண்டும் தனது காரில் நாராயணபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரி திடீரென குபேரன் கார் மீது பலமாக மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதில்  காருக்குள் சிக்கிய குபேரன் சம்பவ இடத்திலேயே ரத்த வௌ்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து குபேரன் சடலத்தை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் மற்றும் லாரியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை யும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories: