தகுந்த காரணம் வேண்டும்; இஷ்டத்திற்கு வழக்கை ஒத்திவைக்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி அதிரடி

புதுடெல்லி: ‘உச்ச நீதிமன்றம் செயல்படும் முறையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 3வது மூத்த நீதிபதியாக இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் நேற்று பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார். வழக்கு ஒன்றின் போது வழக்கறிஞர் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

நீதிமன்றத்தின் நேரம் என்பது விலை மதிப்புமிக்கது என்பதை வழக்கறிஞர்கள் உணர வேண்டும். வழக்கின் விவரங்களை நீதிபதிகள் குறிப்பெடுத்து படித்து விட்டு வருகின்றனர். ஆனால், வழக்கறிஞர்கள் வாதாடுவது கிடையாது. எனவே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் செயல்படும் முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தங்களது வழக்கு பட்டியலில் இடம்பெறவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்தால் ஒத்திவைக்க வேண்டும் என கேட்கிறார்கள். இனிமேல் குடும்பத்தில் ஏதேனும் தவிர்க்க முடியாத சூழல், கொரோனா மாதிரியான பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டால் மட்டுமே வழக்குகள் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படும். இல்லையேல், அது முழுமையாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அதிரடியாக கூறி உள்ளார். புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தற்போது நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித் வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: