பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: போலி பத்திரப்பதிவு செய்தால் 3 ஆண்டு சிறை; புகார் அளித்தால் 30 நாட்களில் நடவடிக்கை

சென்னை: பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். போலி பத்திரப்பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், புகார் அளித்ததால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பத்திரங்கள் பதிவு செய்யப்படும் போது, ஒரு சில சார்பதிவாளர்கள் பதிவு பணியின் போது, மூலபத்திரங்களை கேட்டு ஆய்வு செய்வதில்லை. அதேபோன்று அந்த சொத்துக்கான வில்லங்கமும் பார்க்காமல், பத்திரம் பதிவு செய்கின்றனர்.  

இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரிஜினல் உரிமையாளர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏற்கனவே, இது போன்ற வழக்குகள் ஏராளமானவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், போலி ஆவண பதிவு விவகாரத்தில் உடனடியாக தீர்ப்பு கிடைப்பதில்லை. இதனால், ஒரிஜினல் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை பயன்படுத்த முடியாத நிலையில், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை தான் உள்ளது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்களுக்கு வழங்கும் அதிகாரம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமசோதாவின் படி, போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யலாம். இதனால், யாருக்காவது இடர்பாடு ஏற்பட்டால் ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அவர் ஐஜியிடம் முறையீடலாம். அதன்பிறகு செயலாளர் வரை முறையிடலாம். போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், அபராதம் வசூலிக்கவும் சட்டத்திருத்ததில் வழிவகை  செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு கடந்தாண்டு செப்டம்பர் இறுதியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து ஒன்றிய அரசின் சட்டத்துறைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ஒன்றிய அரசின் சட்டத்துறை செயலாளருக்கு தமிழக அரசின் சட்டத்துறை சார்பில் கடிதம் எழுதியது. இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அதிகாரிகளும் ஒன்றிய அரசின் சட்டத்துறை அதிகாரிகளுடன் பேசி வந்தனர். அதன்படி ஒன்றிய அரசின் சட்டத்துறை இந்த மசோதாவுக்கு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி சட்டதிருத்த மசோதா அமலுக்கு வருகிறது. இந்த சட்ட திருத்த மசோதா மூலம் சட்ட விரோதமாக நிலங்களை பத்திரப்பதிவு செய்த நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்டு சொத்துகளை உரியவர்களுக்கு பெற்று தர முடியும். இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வர காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: