பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகளை எதிர்த்து மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 13வது அகில இந்திய மாநாடு சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொள்கிறார்.

இதுதொடர்பாக, சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியன் வங்கி நிர்வாகம் லாப நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. எழுத்தர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்காலிக ஓட்டுனர் இடங்கள் மற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் ஆகியவற்றை சட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றுவதில்லை. எனவே இந்த இரண்டு நாள் மாநாட்டில் நியாயமான கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு அவற்றை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவங்கள் தீட்டப்படும். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகளை எதிர்த்தும், மற்ற தொழிற்சங்கங்களோடு இணைந்து போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: