நாடு முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை: நாடு முழுவதும், விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சென்னை ஐ.சி.எப் ரயில்வே தொழிற்சாலைக்கு வந்தார். தொழிற்சாலையில் தயார் செய்யப்படும் ரயில்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். ஐசிஎப் தொழிற்சாலை பொது மேலாளர் ஏ.கே. அகர்வால், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மால்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடியில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக ரயிலுக்கு, ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2023 ஆகஸ்டிற்குள் 75 ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது தயாராகி வரும் புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. 160 கி.மீ.வேகத்தில் அதிவேகமாக பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த வந்தே பாரத் ரயில்களில் 102 ரயில்கள் சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயில் 50,000 கிமீ தொலைவிற்கு சோதனை ஓட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: