மகளிருக்காக இயக்கப்படும் 2 பஸ்களில் நிதி நிறுவன விளம்பரம்

சென்னை: மகளிருக்காக இயக்கப்படும் பஸ்களில் முதல்கட்டமாக 2 மாநகர இலவச பேருந்துகளில் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது. மேலும் அனைத்து பேருந்துகளிலும் விளம்பரம்  செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் பஸ்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், இந்த பஸ்களுக்கு, பிங்க் வண்த்தில் பெயின்ட் அடிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக பேருந்துகளில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பிங் பெயிண்ட் அடித்த 50 மாநகர பேருந்துகளை கடந்த வாரம் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த பேருந்துகளில் விளம்பரம் இடம்பெறச் செய்யும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி கூறியதாவது: பேருந்துகளின் பக்கவாட்டில் விளம்பரம் இடம்பெற வேண்டும் என்பதற்காகத் தான் முன், பின் பகுதிகளில் மட்டும் வண்ணம் பூச முடிவெடுத்தோம். அதன்படி, தற்போது 2 மாநகர பேருந்துகளில் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து பிங்க் பேருந்துகள் மட்டுமின்றி அனைத்து பேருந்துகளிலும் விளம்பரம்  செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பும் தயாராக உள்ளது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் அதிகரிக்கும். குறிப்பாக ஒரு சில பணிமனைகளில் சாதாரண கட்டண பேருந்துகளை டீலக்ஸ் பேருந்துகளாக இயக்குவதாக புகார்கள் வருகின்றன. இவ்வாறு பிங்க் வண்ணம் பூசப்படுவதால் சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட வேண்டிய அனைத்து பேருந்துகளும் அவ்வாறே இயக்குவதும் உறுதி செய்யப்படும் என்று அதிகாரி தகவல் தெரிவித்தார்.

Related Stories: