கனடா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் கரோலினா பிளிஸ்கோவா

டொரென்டோ: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று அதிகாலை டொரென்டோவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவும், தற்போது டபிள்யூடிஏ தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியும் மோதினர்.

 30 வயதான பிளிஸ்கோவா தற்போது மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 15ம் இடத்தில் உள்ளார். தற்போது நல்ல ஃபார்மில் உள்ள மரியா சக்கரியை, பதற்றமே இல்லாமல் பிளிஸ்கோவா எதிர்கொண்டு விளையாடினார். முதல் செட்டில் பிளிஸ்கோவாவின் அதிரடி சர்வீஸ்களை, சக்கரியால் எதிர்கொள்ளவே முடியவில்லை. சர்வீஸ்களிலேயே புள்ளிகளை எடுத்த பிளிஸ்கோவா, முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டில் சக்கரி திறமையாக ஆடி, தனது கேம்களை தக்க வைத்துக்கொண்டார்.

இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை நீடித்தது. டைபிரேக்கரில் சக்கரி, துல்லியமான சர்வீஸ்கள் மற்றும் பிளேஸ்மென்ட்டுகளில் கவனம் செலுத்தினார். இதிலும் இழுபறியாகி, கடைசியில் ஒருவழியாக 7-6 என 2வது செட்டை சக்கரி கைப்பற்றினார். ஆனால் 3வது செட்டில் சக்கரியின் 2 கேம்களை பிரேக் செய்து 6-1, 6-7, 6-3 என பிளிஸ்கோவா இப்போட்டியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர், நடப்பு கனடா ஓபனில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று இரவு நடந்த மற்றொரு 4ம் சுற்றுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது முதலாம் இடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக்கை, தரவரிசையில் 24ம் இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை ஹடட் மையா 6-4, 3-6, 7-5 என 3 செட்களில் போராடி வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கசகஸ்தானின் புடின்சேவா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: