திண்டிவனம் அருகே 2 பைக், ஆவின் டேங்கர் லாரி, கார் மோதி விபத்து: லாரி உரிமையாளர் பலி: வாகனங்கள் எரிந்து நாசம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே 2 பைக், ஆவின் பால் டேங்கர் லாரி, கார் மோதிய விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழந்தார். வாகனங்கள் எரிந்து நாசமாகின. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் நேற்று மாலை பைக்கில் கூட்டேரிப்பட்டில் இருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் வந்த கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளரான ராமதாஸ்(50) பைக் இளையராஜா ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமதாஸ் மீது திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆவின்பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஏறியது. லாரி சக்கரத்தில் சிக்கிய ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது சாலையில் விபத்தில் சிக்கி கிடந்த பைக் மீது திருச்சியிலிருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பைக்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது காரை ஓட்டி வந்த சேத்பட்டு அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன்(39) மற்றும் காரில் பயணம் செய்த 4 பேர் காரில் இருந்து உடனடியாக இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து காரிலும் அருகில் இருந்த டேங்கர் லாரியிலும் தீ பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில் இரு சக்கர வாகனம், ஆவின் பால் டேங்கர் லாரி, கார் ஆகியவை எரிந்து நாசமாகின.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மயிலம் போலீசார், உயிரிழந்த ராமதாசின் உடலை கருகிய நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். பின்னர் விபத்துக்குள்ளான ஆவின் பால் டேங்கர் லாரியில் இருந்த பாலை கீழே இறக்கி, கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: