சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு தமிழக முதல்வர் விருது வழங்குகிறார்: ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி நகராட்சிக்கும் விருது

சேலம்: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சேலம் மாநகராட்சிக்கு, சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டுகிறார். தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த வாரம் சேலம் வந்த ஆய்வுக்குழுவினர் மாநகராட்சியின் பொறியியல் பிரிவு, வருவாய் பிரிவு, சுகாதார பிரிவு மற்றும் நகரமைப்பு போன்றவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நுண் உயிரி உரம் தயாரிப்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டதில், தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் சிறப்பு நிதியாக ரூ.25 லட்சத்தை வழங்குகிறார். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பெறவுள்ளனர். இதேபோல், நடப்பாண்டு சிறந்த நகராட்சிக்கான முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ.15 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தத்திற்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த தென்காசிக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது.

Related Stories: