ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜப் பெருமாள் உலா: அழகர்கோவிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

அழகர்கோவில்: ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜப் பெருமாள் தேரில் அமர்ந்திருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிபெருந்திருவிழா, கடந்த 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக துவங்கியது. அதிகாலை 4.15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜப் பெருமாள் தேரில் எழுந்தருளினார்.  காலை 6.30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தேர், அழகர்கோவில் வளாகத்தில் வலம் வந்தது.

முன்னதாக திருத்தேரின் அடுக்கு முகப்புகள் வர்ணம் தீட்டப்பட்டு, அலங்கார துணிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாளை 13ம் தேதி மாலையில் புஷ்ப சப்பரம் நடைபெறவுள்ளது. 14ம் தேதி ஞாயிற்றுகிழமை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: