ஆன்லைன் ரம்மியால் கடன்: சொந்த வீட்டில் 50 பவுன் நகை திருடிய பாதிரியார் மகன் கைது

திருவனந்தபுரம்: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் தொல்லையால் சொந்த வீட்டிலேயே 50 பவுன் நகை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணத்தை திருடிய பாதிரியாரின் மகனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் நைனான். அருகில் உள்ள திருக்கோதமங்கலம் தூயமேரி பெத்தலகேம் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். அவரது மகன் ஷைனோ (36). வீட்டுக்கு அருகிலேயே ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் ரம்மியிலும் நிறைய பணத்தை இழந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாதிரியார் ஜேக்கப் நைனானும், அவரது மனைவி சாலியும் வெளியே சென்று இருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவுக்குள் பார்த்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை.

இதுகுறித்து பாம்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பீரோவை உடைக்காமல் சாவியை போட்டு திறந்து நகை, பணம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. பீரோ சாவியை பாதிரியார் ஜேக்கப் கட்டிலுக்கு அடியில் தான் வைத்திருப்பாராம். ஆகவே சாவி இருக்கும் இடம் தெரிந்த யாரோ தான் இதில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது திருடப்பட்ட நகையில் 21 பவுன் வீட்டை ஒட்டி உள்ள ஒரு குறுகலான பாதையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருடிவிட்டு செல்லும் அவசரத்தில் நகைகள் கீழே விழுந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். வழக்கமான கொள்ளையர்கள் என்றால் இப்படி கீழே போட்டு செல்ல வாய்ப்பு இல்லை.

எனவே புதிதாக திருட்டில் ஈடுபட்ட ஒருவர் தான் இந்த கொள்ளையை நடத்தி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

 இதில் பாதிரியாரின் மகன் ஷைனோ மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஷைனோவை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லை இருந்ததாலும், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாலும், அதை தீர்ப்பதற்காக சொந்த வீட்டிலேயே திருடியதாக போலீசிடம் ஷைனோ கூறி உள்ளார். திருடிய நகைகளை சிறிய பாத்திரத்தில் போட்டு மண்ணில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார். அதை போலீசார் மீட்டனர். விசாரணைக்குப் பின் அவரை போலீசார் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: