தனியார் பால் நிறுவனங்களில் பால் விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

சென்னை: தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசு நிறுவனமான ஆவின் மூலமாக 38.26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கிறது. தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவது வழக்கம். 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன்பு தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிரடியாக உயர்த்தப்பட்டது.

தினசரி பால் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதாலும், டீக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை தனியார் பாலையே உபயோகிப்பதால் தனியார் பால் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லிட்டருக்கு ரூ.4 உயர்வு இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.

அதன்படி சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் 84 சதவீத பாலின் தேவை, தனியார் பால் நிறுவனங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் எந்தவித யோசனைகளும் செய்யாமல், யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக பால் நிறுவனங்கள் விலையை அதிகரித்து வருகிறார்கள். இந்த போக்கு மிகவும் தவறானது. கொரோனா காலத்தில் விற்பனை சரிந்து விட்டதாக கூறி விலையை உயர்த்தினார்கள். இப்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் எதற்காக இந்த உயர்வு என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தனியார் பால் விலை நிர்ணயம் குறித்து சரியான வரைமுறைகளை கையாள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

*ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் இரு தனியார்  நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த  6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வு ஆகும் என்றும் தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள்  லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றது. இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54 - 56,  ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்பனை செய்து வருகிறது. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள். 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது என்றும் பால் சந்தையில் ஆவினின் பங்கை 50% ஆக உயர்த்துவது பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: