சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகளை பிரிக்கும் பணியில்  ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடந்தது. போட்டியில், 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள், நடுவர்கள், முக்கிய பிரமுகர்கள், செஸ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், 707 போர்டுகளில் வீரர், வீராங்கனைகள் செஸ் விளையாடினர். 60 செஸ் போர்டுகளுக்கு ஒரு கம்ப்யூட்டர் என 12 கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு நகர்வுகளும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணித்து பதிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து பணிகளும் மேற்கொள்ள தமிழக முதல்வர் தலைமையில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு, போட்டி நடைபெறும் ரிசார்ட்டில் ஏற்கனவே 22 ஆயிரம் சதுர அடியில் உள்ள பழைய அரங்கம் மற்றும் வெளிநாடுகளில் உள்ளது.

இதோபோன்று உருவாக்கப்பட்ட 52 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட புதிய அரங்கம், வாகன நிறுத்தம், மீடியா அறை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, மருத்துவத் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, அங்கு இரவை பகலாக்கும் வகையில், அதிக வெளிச்சம் தரக் கூடிய எல்இடி விளக்கு, சிசிடிவி கேமிரா, ஏசி ஆகியவைகள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. இதேபோன்று, மாமல்லபுரம் முழுவதும் சாலைகளின் இருபுறம்பேவர் பிளாக் கற்கள் பதிப்பது, வீரர், வீராங்கனைகள் கடந்து செல்லும் வழியில் உள்ள குளம், குட்டைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாமல்லபுரத்தில் நடந்த அனைத்து பணிகளையும் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு, அறிக்கையாக தயார் செய்து தமிழக முதல்வருக்கு அளித்து வந்தனர். இந்த நிலையில், போட்டி நடந்த ரிசார்ட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் அமர்ந்து விளையாடி டேபிள், அரங்குகள் அனைத்தும் பிரிக்கும் பணியில் வட மாநில ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: