வாலிபர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 4 பேர் சரண்; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

புழல்: மாதவரம் சீதாபதி 16வது தெருவை சேர்ந்தவர் மதன் (எ) மதன்குமார் (35). இவர் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் உள்ள தனியார் லாரி பார்க்கிங் யார்டில், வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஆந்திராவில் இருந்து லாரிகளில் வரும் கம்பிகளை டிரைவர்களின் அனுமதியுடன் சில்லறையாக விற்பனை செய்துவந்துள்ளார். இவருக்கு உதவியாக 4 பேர் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு பார்க்கிங் யார்டில் மதன்குமார் முகம் சிதைந்த நிலையில் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த  சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து, மதன்குமார் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், மதன்குமார் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் மலையடிபுதூர் மாவடி பருத்திவளை தெருவை சேர்ந்த சுரேஷ் (34), திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த சுந்தர் (24), தூத்துக்குடி செய்துங்கநல்லூர் கண்ணன் சோலை பகுதியை சேர்ந்த முத்துமனோகர் (22), துரைபாண்டியன் (எ) தினேஷ் (22) ஆகியோர் நேற்று காலை தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சோழவரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: