தனியார் நிறுவனத்தில் ரூ.6.95 கோடி கையாடல்; ஊழியர்கள் 5 பேர் கைது, ஒருவர் தலைமறைவு

ஆவடி: தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ரூ.6.95 கோடி கையாடல் செய்த அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த அய்யப்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத் (37). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் பணிபுரியும், பெரியார் நகரை சேர்ந்த டைகஸ் விவேக்குமார் (32), நாகப்பட்டினத்தை சேர்ந்த குமரவேல் (32), வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (29), சுரேஷ் (32), திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த திலீப் குமார் (32), தென்காசி பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (32). இவர்கள் இந்நிறுவனத்தில் மென்பொருள் பணி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் இந்நிறுவனத்தின் பணியாளர்களின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த 2020 முதல் பராமரித்து வந்தனர். இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் பணியில் இல்லாத 126 நபர்கள் பணி புரிவது போல், போலியாக ஆவணங்கள் தயாரித்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பேரில் வங்கிக் கணக்கு தொடங்கி அவர்கள் பெயரில் மாதம் சம்பளம், வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளனர். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு பி.எஃ பணம் வராததால் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளரிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில், கணக்காளர்கள் உங்கள் பணத்தை கூகுள் பேவில் அனுப்பி விடுகிறேன் என கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த அந்த ஊழியர் கோபிநாத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர் ஆடிட்டரை வைத்து  ஆய்வு செய்தார். இதில், அந்த நிறுவனத்தில் வேலை செய்த குறிப்பிட்ட 6 பேரும் சேர்ந்து, இந்நிறுவனத்தில் இதுவரை ரூ. 6 கோடி 95 லட்சம் கையாடல் செய்தது  தெரியவந்தது. கோபிநாத் இது குறித்து கடந்த மாதம் ஆவடி ஆணையர் சந்திப்பு ராய் ரத்தோரிடம் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து,  குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜி.கீதா  வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தினார். இதில், அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த 6 நவர்களுக்கும் இந்த பணம் கையாடலில்  தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் பணம் கையாடல் செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 5 நபர்களையும் நேற்றுமுன்தினம் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த திலீப் குமாரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், குற்றவாளிகளை நீதிமன்றகாவலில் எடுத்து  விசாரிக்க உள்ளோம் என கூறியுள்ளனர்.

Related Stories: