இளம்பெண்ணிடம் தகறாறு கணவன் தாக்கியதில் இறைச்சி கடைக்காரருக்கு கை உடைப்பு; போலீசார் விசாரணை

ஆவடி: இளம் பெண்ணிடம் தகாத வார்த்தை பேசியதால் பெண்ணின் கணவரும், உறவினரும் சென்று  கேட்ட தகராறில் கோழிக்கறி கடைக்காரின் கை உடைந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடி அடுத்து அய்யப்பாக்கம் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் ஆனந்தன் (40). இவரின், கடைக்கு எதிரில் வசிப்பவர் அஞ்சலி (25). இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சிக்கன் வாங்குவதற்காக கடைக்கு சென்ற அஞ்சலியை, ஆனந்தன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்றவர் கண்கலங்கி அழுதுள்ளார். இதனை பார்த்த அவரது கணவர்  மணிகண்டன் (35) நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது சகலை கார்த்திக் (34) இருவரும் சேர்ந்து சிக்கன் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு ஆனந்தனை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், பேச்சுவார்த்தை முற்றவே, இருவரும் சேர்ந்து ஆனந்தனை  கையால் தாக்கியும்,  ஆத்திரத்தில் அவரது  கைகளை உடைத்தனர். இருப்பினும், அந்த வேதனையிலும்  ஆனந்தன் தான் கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து விசியதில், கார்த்திக் முகம், தாடை மற்றும் நெற்றி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்திலிருந்த கார்த்திக் மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திருமுல்லைவாயில் காவல் துறையினர்,  ஆனந்தன் மற்றும் கார்த்திகை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தரப்பில் கூறுகையில், இருவருக்கும் சிகிச்சை முடிந்த பிறகுதான், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

Related Stories: