குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தால் சேதமடையும் வாகனங்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருத்தணி: திருத்தணி நகரத்தில் உள்ள 21 வார்டுகளில் மொத்தம் 126 தெருக்கள் உள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக ரூ.109 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் 4 லட்சம் லிட்டர் மற்றும் இந்திரா நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் கட்டப்பட்டன. சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டிகளில் இணைப்பதற்காக இரும்பு பைப்புகள் சுமார் 60 கி.மீ. தொலைவுக்கும் டிஐ பைப்புகள் 80 கிலோ மீட்டர் தொலைவுக்கும் எச்டிபி பைப்புகள் 80 கி.மீ. நீளத்துக்கும் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

திருத்தணி பைபாஸ் சாலை, சித்தூர் சாலை, அரக்கோணம் சாலை, மாபொசி. சாலை, கடப்பா டிரங்க் ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் குழாய்கள் கொண்டு செல்வதற்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக நெடுஞ்சாலை துறையினருக்கு சுமார் 6 கோடி வரை செலுத்தியுள்ளனர். ஆனால் தற்போது மேற்கண்ட சாலைகளில் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு அந்த பள்ளத்தில் குழாய் பதிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு தோண்டப்பட்ட பள்ளத்தை சரிப்படுத்தி சமமாக வைக்கவேண்டும். ஆனால் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம் காரணமாக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, பைக் மற்றும் சிறிய வாகனங்களில் செல்கின்றவர்கள் அந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். ஆகவே, ‘’தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறை முன்வரவேண்டும்’’என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: