காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று: தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கங்கள் வென்று தமிழகம் திரும்பிய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்தில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி 61 பதக்கங்களை வென்றனர். இந்த தொடரின் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் அசந்தா சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் பதக்க வேட்டை நடத்தி அசத்தினர். சரத் கமல் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், சத்தியன் 1 தங்கம், 2 வெள்ளி வென்றார். சென்னை திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் நேற்று தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவினர்கள், பெற்றோர்களும் வரவேற்றனர்.

* சரத் கமல் உற்சாகம்

அரையிறுதிக்கு பிறகு அதிக நம்பிக்கையோடு விளையாடினேன். கடினமாக ஆரம்பித்த போட்டி, பின்பு சிறப்பாக அமைந்தது. 2006ம் ஆண்டு 2 தங்கம் வென்றிருந்தேன். இந்த முறை 3 தங்கம் வென்றுள்ளேன். இந்த போட்டி வாழ்க்கையில் சிறப்பான போட்டியாக அமைந்தது. விளையாட்டிற்கு தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி முக்கியத்துவம் வழங்க வேண்டும். மைதானங்கள் அதிகமாக உருவாக்கி தர வேண்டும். வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவது முக்கியம். சிறுவயது முதல் விளையாட்டை முதன்மையாக எடுக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. படிப்பு முக்கியமானதாக இருப்பதால், விளையாட்டில் மாணவர்களுக்கு கவனம் செலுத்த முடிவதில்லை. சிறுவயதில் என்னோடு இருந்தவர்கள் என்னை விட சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஆனால், அவர்கள் படிக்க சென்றதால் விளையாட்டை தொடர முடியவில்லை. இளம் வயதை விட, வயசாக வயசாக சிறப்பாக விளையாடுகிறேன். வரக்கூடிய சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பதக்கங்களை வென்று தருவேன்.

* சத்தியன் நெகிழ்ச்சி

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் விளையாடினோம். பல்வேறு நாடுகள் கலந்துகொண்டதால் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இங்கிலாந்து நாட்டு போட்டியாளர்களுடன் விளையாடியது மிகப் பெரிய சவால். நான் தனிநபர் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வெண்கலப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளேன்.காமன்வெல்த் போட்டியில் எனக்கு பதக்கங்களை வெல்ல பயிற்சியாளர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். 3 விதமான பதக்கங்களை வென்றது பெருமையாக உள்ளது.

அடுத்தகட்டமாக, ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து ஊக்கமும், உதவியும் அளித்து வருகின்றன. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடா்ந்து உதவி செய்தால் ஒலிம்பிக்கில் நிச்சயமாக பதக்கங்களை வெல்வேன். எனக்கு உறுதுணையாக இருந்த அம்மா, அப்பாவை பாராட்ட வேண்டும். தற்போது என்னுடைய தந்தை எங்களிடம் இல்லை. தந்தையை நினைத்து அழுதுகொண்டே விளையாடினேன். பயிற்சியாளர்களுக்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தி த்து வாழ்த்து பெற உள்ளேன். 

Related Stories: